வன்முறைகளும், பின்விளைவுகளும்

விரக்தி வன்முறையின் ஆணிவேராகும்.

இது ஒரு உளவியல் ஆய்வு முடிவாகும்.

வன்முறையென்பது தனக்கெதிராக அல்லது பிறருக்கெதிராக அல்லது இரண்டுமாகக் காணப்படலாம்.

எமது தமிழ்ச்சமூகத்தில் அண்மைக்காலங்களில் வன்முறையானது மிகவும் அதிகரிப்படைந்து காணப்படுகின்றன.

வன்முறைகள் ஒரு நச்சு வட்டமாக (vicious cycle) தொழிற்படுகின்றது.

அதாவது வன்முறையால் விரக்தி நிலை கூடும். இதனால் மீண்டும் வன்முறை கூடும். எனவே அந் நச்சு வட்டமானது பல்வேறு படிகளில் உடைக்கப்பட்டு நலமான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டியது எமது மக்களின் உடனடித் தேவையும் பொறுப்புமாகவுள்ளது.

வன்முறையின் சாட்சிகளாக சமூகத்தில் அதிகரித்க்காணப்படும் தற்கொலை முயற்சிகள் மது, போதைப்பொருட்பாவனை பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் துஷ்பிரயொகம், குடும்ப வன்முறைகள், மணமுறிவுகள், அதிகரித்த மனநோயாளிகளின் எண்ணிக்கை ஏமாற்றுதல் கொள்ளைகள், சண்டைகள் கொலைகள், என எமது பார்வையில் நாளாந்த நிகழ்வுகளாகிவிட்டன.

தற்கொலை முயற்சி மேற்கொண்டவர்களிடத்தில் 2011 இல் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது.

அதிலிருந்து பின்வரும் விடயங்கள் அறியப்பட்டன.

தற்கொலை முயற்சியில் ஈடுபட்டோரில் 95 வீதத்தினர் கல்வியறிவு G.C.E. O/L ஆகக் காணப்பட்டது.

உயர் வீதங்கள் 16 தொடக்கும் 23 வயதுகளிலும் 35 தொடக்கம் 45 வயதுகளிலும் காணப்பட்டது.

16 தொடக்கம் 23 வயதினில் உறவுச்சிக்கல்கள் ( பெற்றோர் , பிள்ளைகளுக்கிடையிலான முரண்பாடு) பரீட்சை நெருக்கடி நிலை, காதல் தோல்விகள் போன்ற காரணிகள் செல்வாக்குச் செலுத்தின.

35 தொடக்கம் 45 வயதினரிடையே காரணிகளாக மதுபாவனை, கணவன் மனைவி இடையேயான முரண்பாடுகள், குடும்ப வன்முறை, பொருளாதார நெருக்கடிகள், மணமுறிவுகள் என்பன அமைந்திருந்தன.

இதைவிட அண்மைக்காலமாக முறையில் அமைந்த கடன் சுமைகள் (Ioan/ lease) என்பன காரணிகளாகக் காணப்பட்டன.

இவ்வாறான காரணிகளின் தாக்கத்தைக் குறைக்குமுகமான சமூகத்தினை உருவாக்குதல் ஆரோக்கியமான செயற்பாடுகளில் ஒன்றாகும்.

மனிதர்கள் விரக்தி நிலையடைதலைக் குறைக்க எல்லோருக்கும் வேலையும் பொறுப்பும் எனும் கருப்பொருளில் அவரவர் தகமை திறமைக்கேற்ப வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்படல், சேவைகளின் தரத்தை மேம்படுத்தல், தேவையான செயற்றிட்டங்களை செயற்படுத்தலில் இறுக்க மாகவிருத்தல், தேவையற்ற பொருத்தமற்ற செயற்றிட்டங்களைத் தடைசெய்தல், மட்டுப்படுத்தபப்பட்ட கட்டுப்பாட்டுடன் கூடிய செயற்பாடுகளைக்கடைப் பிடித்தல் என்பன முக்கியமானவையாகும்.

இதைவிட மனித நெருக்கடியான வாழ்க்கைக்காலப்பருவங்கள் பொதுப்பரீட்சைகள் – பெறுபேறுகள் வரும் பொழுது, காதல் திருமணக் காலப்பகுதிகள், குடும்பத்தில் அடிக்கடி சண்டைகள் வருகின்ற பொழுது, வேலை வாய்ப்பின்மை, பாரியளவிலான தொழில் நட்டங்கள் ஏற்படும் பொழுது, வாழும் சமூகத்திற்கு ஏற்ப விலகல் நடத்தைகளில் ஈடுபடும் பொழுது, மது போதைப்பொருட்பாவனைக்கு உட்படும் பொழுது அல்லது தமது பணிகளை நேர்த்தியாகச் செய்ய முடியாமல் தலையிடி, உடல் வருத்தம் அடையும் பொழுது, இவர்களுடன் கூட இருப்பவர்கள் ( குடும்ப உறுப்பினர் கூட படிப்பவர் நண்பர்கள், கூட வேலை செய்பவர்கள், அயலவர்கள், ஊர்ப்பெரியோர்) ஒருத்தருக்கொருத்தர் நெறிப்படுத்துனராகவும், ஆதரவாளர்களாகவும் செயற்படுவதன் மூலம் விரக்தி நிலையடைதலைக் குறைக்க முடியும். குறிப்பிட்ட கால அளவுக்குள் ( ஒரு மாத காலம்) அவர்களால் விரக்தியிலிருந்து மீளமுடியாமலிருப்பின் அருகிலுள்ள உளநலப்பிரிவு செயற்படும் வைத்தியசாலைக்குச் சென்று அவர்களைக் கூட்டிக் கொண்டு போய் தொழில்வாண்மை நிறைந்த சேவையினைப்பெற்றுக் கொள்ளலாம். அங்கு இவர்களின் சிந்தனைகள் ஆரோக்கியமான முறையில் நெறிப்படுத்தப்படுவதுடன், நேர்த்தியான மாற்றீடான ஒரு முறைமையைத் தெரிந்தெடுத்து வாழும் கலையைக் கற்றுக் கொள்வார்கள்.

அடுத்து சமூகத்தில் காணப்படும் பெரும் சீரழிவு மது போதைப் பொருள் பாவனை ஆகும். இது மனித சமூகத்தில் இலாபமீட்டும் தொழிலாகக் காணப்படுவதற்கு அடிப்படைக்காரணமானது மனித மூளையானது இலகுவில் போதைப்பொருட்களுக்கு அடிமையாவதுடன், சமூகத்தில் அதிகரித்துக் காணப்படும் நெருக்கீட்டு நிலைகள் மனிதனை அதனை நோக்கி தள்ளிச் செல்கின்றது. எனவே சமூக நெருக்கடிகளைக் குறைப்பதன் மூலமும் மருத்துவு சிகிச்சை மூலமும் இலகுவில் போதைப்பொருட் பாவனையிலிருந்து மீண்டு கொள்ள முடியும்.

அடுத்து சமூகத்தில் காணப்படும் மிகப்பாரிய பிரச்சினைகளாவன திருமண முறிவும் குடும்பங்கள் சீரழிந்து போதலுமாகும். சமூகப்பிறழ்வுகள் மிக மிக அதிகம் காணப்படுவது (90%) சிதைந்த குடும்பங்களிலாகும். இங்கு சிதைந்த குடும்பங்கள் எனப்படுவது பெற்றோர் ( அம்மா அல்லது அப்பா மட்டும்) காணப்படும் குடும்பம் அல்லது பல பெற்றோர் காணப்படும் குடும்பம் ( பெற்றோர் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்தவர்களாயிருத்தல்) பெற்றோர் பொறுப்பற்றவர்களாகவிருத்தல் ( உழைக்காமை, மது பாவனை, தொழில் காரணமாக குடும்பத்திலிருந்து நீண்ட நேரம் விலகியிருக்கும் பெற்றோர், சமூகப்பிறழ்வு நடத்தை உள்ள பெற்றோர்) உளநோயாளர் குடும்பங்கள் அடங்குகின்றன. எனவே இங்கு குடும்ப உறுப்பினர்களை மீள ஒழுங்கு படுத்திக் கட்டியெழுப்புதலும் பொறுப்பு வகுத்தலும், சிகிச்சையளிக்கப் படவேண்டிய விடயங்கள் சிகிச்சையளிக்கப் படவேண்டியுள்ளது.

நலமான ஒரு சமூகத்தைக் கட்டி எழுப்புவதற்கு மனிதனின் ஒவ்வொரு வாழ்க்கைப் படிமுறையும் பொறுப்புக்கூறலுடன் கூடிய ஒழுங்கு படுத்தலில் அமைக்கப்பட வேண்டும். குழந்தைப் பருவங்கள் நல்ல பெற்றோரின் அரவணைப்புடன் நெறிப்படுத்தப் படுவதுடன் நெருக்கமான உறவுகளை சிறப்பாக பேணவும் கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக் கொள்ளல், தவறுகளை உடனடியகத் திருத்தி அமைத்துக் கொள்ளல், முழுமையான செயற்பாடுகளில் ஈடுபடல் ( Work completion) என்பன மிகவும் அவசியமான விடயங்களாகும்.

மாணவப்பருவம் அறிவுகளைப் பெற்றுக் கொள்வதுடன் பட்டறிவுகளை அறிவுபூர்வமாகப் பார்க்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். சகபாடிகளையும் சமூகங்களையும் புரிந்து கொள்ளவும் வரையறைக் குட்பட்ட எண்ணிக்கையான நண்பர்களை வைத்திருப்பதுடன் அவர்களுடன் பழக்கத்திற்கான எல்லைகளையும் வகுத்துக் கொள்ள வேண்டும். பொழுதுகளை ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடுதல், நுண் தொழில்கள் சிலவற்றைக் கற்றுக் கொள்ளல் போன்றன மனித ஆற்றல்களைக் கூட்டுவதுடன் நேரிய சிந்தனைக்கும் வழிவகுக்கும். எப்பொழுதும் பெரியவர்களுடன் அறிவுபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபடுவதுடன் பாரிய முடிவுகள் எடுக்கும் பொழுது பாடங்கள் தேர்தல், பரீட்சைக்கு முகம் கொடுத்தல், காதல் உணர்வு, தொழில் முயற்சி என்பவற்றில் ஈடுபடும் பொழுது உங்களுக்கு உரித்துடைய தரமான பெரியவர்களின் வழிகாட்டல்களைப் பெற்று தீர்க்கமான முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இவ்வாறான பாரிய அளவிலான வன்முறைகள் சமூகத்தில் காணப்படும் பொழுது நாட்டின் கொள்கை வகுப்பாளர்களும் திட்டப் பணியாளர்களும் மேற்படிக் காரணிகளை ஆராய்ந்து ஒழுங்குபடுத்தி செயற்திட்டங்களைச் செய்தால் ஒரு நலமான சமூகத்தை உருவாக்க முடியும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.

Dr. முல்லை பரமேஸ்வரன்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of