இதயத்தில் ஏற்படும் பிறவிக் குறைப்பாட்டு நோய்கள் (congenital heart diseases)

இதயம் நான்கு அறைகளைக் கொண்ட உடலுக்கும் நுரையீரலுக்கும் குருதியை வழங்குகின்ற பம்பியாகும்.

மேலே உள்ள வலது மற்றும் இடது சோணை அறைகளைப் பிரிக்கும் சுவர் சோணை அறை பிரிசுவர் எனப்படும்.

கீழே உள்ள வலது மற்றும் இடது இதய வறைகளைப் பிரிக்கும் சுவர் இதயவறைப் பிரிசவர் எனப்படும்.

உடல் உறுப்புகளில் இருந்து ஒட்சிசன் (O2) குறைந்த குருதி மேற்பெருநாளம், கீழ் பெருநாளங்களினூடாக வலது சோணை அறையை அடைந்து முக்கூர் வால் பினூடாக வலது இதய அறையை அடையும். இக் குருதி வலது இதய அறையில் இருந்து பிரதான சுவாசப் பெருநாடியினூடாக நுரையீரல்களைச் சென்றடையும்.

நுரையீரல்களில் (O2) ஏற்றப்பட்ட குருதி நான்கு சுவாசப் பெருநாளங்களினூடாக இடது சோணை அறையை வந்தடையும் இக் குருதி இடது சோணை அறையிலிருந்து இரு கூர்வால்பினூடாக இடது இதயவறையை அடைந்து தொகுதிப் பெருநாடியினூடாக உடலுறுப்புகளைச் சென்றடையும்.

இதயத்தில் ஏற்படும் பிறவிக் குறைப்பாட்டு நோய்கள் (Congenital Heart disease)

இவை எவ்வாறு ஏற்படுகின்றன?

இக் குறைபாடுகள் கர்ப்பப்பையில் குழந்தையின் இருதய விருத்தியில் ஏற்படுகின்ற மாற்றங்களினால் உண்டாகின்றன.

அநேகமான சந்தர்ப்பங்களில் இக் குறைபாடுகள் உருவாவதற்கான காரணங்கள் அறியப்படவில்லை. சில வேலைகளில் கர்ப்ப காலத்தின் ஆரம்ப நிலையில் தாய்க்கு ஏற்படுகின்ற நோய்களினாலும், குழந்தைக்கு பிறப்பிலிருந்து காணப்படுகின்ற வேறு சில நோய்களினாலும் ஏற்படலாம்.

ஏன் எனது குழந்தைக்கு இந்நோய் ஏற்பட வேண்டும்?

பல கர்பிணித் தாய்மார்களும் அவர்களது கணவன்மாரும் தமது குழந்தைக்கு ஏற்பட்ட குறைபாட்டுக்குத் தாங்கள் தான் காரணமோ என கவலைப்படுகின்றனர். ஆனால் இக் குறைபாடுகள் எவருக்கும் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஏற்படலாம் என அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

உலகளாவிய ரீதியில் ஒவ்வோரு 1000 கர்ப்பத்திலும் 7 சிசுக்களுக்கு (0.7%) இந்தக் குறைபாடுகள் ஏற்படலாம். இவற்றில் அரை வாசிக்கு மேற்பட்ட குழந்தைகளின் குறைபாடுகள் பிரச்சினை அற்றவையாகவோ அல்லது சத்திரசிகிச்சை மூலம் முழுமையாக சரிப்படுத்தக் கூடியவையாகவோ காணப்படுகின்றன.

எவ்வாறு குழந்தைகளின் இருதயநோய் கண்டறியப்படுகின்றது?

 சில இருதயநோய்கள் கர்ப்பப்பையில் குழந்தை இருக்கும் போதே கண்டறியப்படலாம். மகப்பேற்று வைத்திய நிபுணர்களினால் வழமையாகச் செய்யப்படும். Scan (ஸ்கான்)னில் குழந்தையின் இருதயம் தொடர்பில் சந்கேகம் ஏற்படின். குழந்தை இருதயவியல் நிபுணரின் உதவியோடு இருதயநோய் கண்டறியப்படலாம்.

பெரும்பாலான இருதயநோய்கள் பிறந்த பிறகே கண்டுபிடிக்கப்படுகின்றன.

ஒவ்வோரு புதிதாகப் பிறக்கின்ற குழந்தைகளும் வைத்தியர்களினால் பரிசோதிக்கப்பட்ட பின்பே வீடு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

பின்வரும் மாற்றங்கள் அல்லது வித்தியாசங்கள் பரிசோதனையின் போது கண்டறியப்படின் குழந்தை இருதயவில் நிபுணரின் (Paediatric Cardiologist) ஆலோசனை பெறப்படும்.

  • வித்தியாசமான இருதய ஒலி (Murmur)
  • இருதயத் துடிப்பு வேகமாற்றம் (Techycardia / Bradycardia)
  • மிகக்கூடிய சுவாச வேகம் / மூச்சுத் திணறல் (Tachypnvea/ Dyspnoea)
  • நீல நிறமாதல் (Cyanosis)
  • பால் அருந்தாமை (Poor feeding)

சில வேளைகளில் இந்த வித்தியாசங்கள் குழந்தை பிறந்தவுடன் தோன்றாமல் ஒரிரு தினங்களுக்குப் பின்பே வெளிப்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் குழந்தையை ஏற்கெனவே வீட்டுக்குத் கொண்டுசெல்ல அனுமதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக குழந்தையை வைத்திய சாலைக்குக் கொண்டு வர வேண்டும்.

வளர்ந்த பிள்ளைகளில் எவ்வாறு இருதய நோய் கண்டிறியப்படுகின்றது?

பாடசாலைகளில் நடைபெறும் வைத்தியப் பரிசோதனையின் போது இருதய நோய்க்குரிய குணங்குறிகள் கண்டறிப்பட்டால் அவர்கள் குழந்தை மருத்துவரினூடாக (Consultant Paediatrician) இருதயவியல் பிரிவுக்கு அனுப்பப்படுவர்.

சில வேளைகளில் திடீர் மயக்கம், நெஞ்சுப் படபடப்பு (Palpitation) போன்ற காரணங்களினாலும் இவர்கள் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு பின்னர் இருதயவியல் பிரிவுக்கு அனுப்பப்படுவர்.

இவர்களுக்க ECG (ஈ.சி.ஜீ) ECHO (இருதய நோய்கள்) (24 மணி ஈ.சிஜீ) போன்ற பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்ட பின் இருதய நோய் இருப்பின் அது கண்டறியப்படும். இந்தப் பரிசோதனைகளின் பின்னர் அவர்களுக்கு இருதய நோய் சம்மந்தமாக பூரணமான விளக்கம் அளிக்கப்படும்.

இலங்கையில் எவ்வாறான மருத்துவ சவதிகள் அரச வைத்திய சாலைகளில் வழங்கப்படுகின்றன.?

யாழ்ப்பாணம் உட்பட குருநாகல், கண்டி, காலி, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் குழந்தை இருதயவியல் நிபுணரின் சேவை நிரந்தரமாகக் கிடைக்கப் பெறுகின்றது.

கொழும்பு சிறுவர் (Lady Ridgeway) வைத்தியசாலையில் மட்டுமே குழந்தைகளுக்கான இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது.

இருதயத்தில் இருக்கம் சில குறைபாடுகளை சத்திரசிகிச்சையின்றி (Cardiac Catheterization) மூலம் குணமாக்கலாம். அதேவேளை சில சத்திரசிகிச்சைகளுக்கு முன்பு ( Cardiac Catheterization) என்னும் பரிசோதனை அத்தியாவசியமாக உள்ளது. இந்த வசதியை கொழும்பு, யாழ்ப்பாணம், காலி ஆகிய மாவட்டங்களில் இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

எனது குழந்தை இருதயநோய் கண்டறியப்படின்

வைத்தியரின் அறிவுறுத்தல்களைச் சரிவரக் கடைப்பிடிக்க வேண்டும்.

சில இருதய நோய்கள் இயற்கையாகவே குணமாகும் தன்மை கொண்டவை. இவற்றுக்கு எந்தவிதமான மருந்துகளோ சத்திரசிகிச்சையோ தேவைப்படாது.

இருதயத்தில் உள்ள சில குறைபாடுகளுக்கு உடனடியாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவேண்டும். இல்லையேல் குழந்தை இறக்கவும். நேரிடலாம். அதேவேளை சில குறைபாடுகளுக்கு சற்று காலம் தாழ்த்தியே சத்திரசிகிச்சை தேவைப்படும்.

சில இருதய நோய்களுக்கு இருதய சத்திரசிகிச்சையின் மூலம் நோய் முழுமையாக குணமாக்கப்படலாம். அதேவேளை சில நோய்களுக்கு கட்டம் கட்டமாக ஒன்றுக்கு மேற்பட்ட சத்திரசிகிச்சைகள் தேவைப்படும்.

சத்திரசிகிச்சையின் பின்பும் சில இருதயநோய்கள் உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் இருதயவியல் நிபுணர்களின் அவதானிப்பில் இருப்பது அவசியம்.

Dr.I.R. ரகுநாதன், குழந்தை இருதயவியல் நிபுணர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of